சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  
364   திருவானைக்கா திருப்புகழ் ( - வாரியார் # 502 )  

நிறைந்த துப்பிதழ்

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தனந்த தத்தன தானான தானன
     தனந்த தத்தன தானான தானன
          தனந்த தத்தன தானான தானன ...... தந்ததான

நிறைந்த துப்பிதழ் தேனூறல் நேரென
     மறந்த ரித்தக ணாலால நேரென
          நெடுஞ்சு ருட்குழல் ஜீமூத நேரென ...... நெஞ்சின்மேலே
நெருங்கு பொற்றன மாமேரு நேரென
     மருங்கு நிட்கள ஆகாச நேரென
          நிதம்ப முக்கணர் பூணார நேரென ...... நைந்துசீவன்
குறைந்தி தப்பட வாய்பாடி யாதர
     வழிந்த ழைத்தணை மேல்வீழு மாலொடு
          குமண்டை யிட்டுடை சோராவி டாயில ...... மைந்துநாபி
குடைந்தி ளைப்புறு மாமாய வாழ்வருள்
     மடந்தை யர்க்கொரு கோமாள மாகிய
          குரங்கை யொத்துழல் வேனோம னோலய ...... மென்றுசேர்வேன்
மறந்த சுக்ரிப மாநீசன் வாசலி
     லிருந்து லுத்தநி யோராத தேதுசொல்
          மனங்க ளித்திட லாமோது ரோகித ...... முன்புவாலி
வதஞ்செய் விக்ரம சீராம னானில
     மறிந்த திச்சர மோகோகெ டாதினி
          வரும்ப டிக்குரை யாய்பார்ப லாகவ ...... மென்றுபேசி
அறந்த ழைத்தநு மானோடு மாகடல்
     வரம்ப டைத்ததின் மேலேறி ராவண
          னரண்கு லைத்தெதிர் போராடு நாரணன் ...... மைந்தனான
அநங்கன் மைத்துன வேளேக லாபியின்
     விளங்கு செய்ப்பதி வேலாயு தாவிய
          னலங்க யப்பதி வாழ்வான தேவர்கள் ...... தம்பிரானே.
Easy Version:
நிறைந்த துப்பு இதழ் தேன் ஊறல் நேர் என மறம் தரித்த
கண் ஆலால(ம்) நேர் என
நெடும் சுருட்டு குழல் ஜீமூத(ம்) நேர் என நெஞ்சின் மேலே
நெருங்கு பொன் தனம் மா மேரு நேர் என
மருங்கு நிட்கள ஆகாசம் நேர் என நிதம்பம் முக்கணர்
பூண் ஆரம் நேர் என நைந்து சீவன் குறைந்து இதம்பட
வாய் பாடி
ஆதரம் அழிந்து அழைத்து அணை மேல் வீழு(ம்) மால்
கொடு குமண்டை இட்டு உடை சோரா விடாயில் அமைந்து
நாபி குடைந்து
இளைப்புறும் மா மாயா வாழ்வு அருள் மடந்தையர்க்கு ஒரு
கோமாளம் ஆகிய குரங்கை ஒத்து உழல்வேனோ மனோலயம்
என்று சேர்வேன்
மறந்த சுக்ரிப மா நீசன் வாசலில் இருந்து உலுத்த நீ ஓராதது
ஏது சொல் மனம் களித்திடல் ஆமோ துரோகித(ம்)
முன்பு வாலி வதம் செய் விக்ரம சீராமன் நான் நிலம் அறிந்த
அதிச் சரம் ஓகோ கெடாது இனி வரும்படிக்கு உரையாய் பார்
பல ஆகவம் என்று பேசி
அறம் தழைத்த அநுமானோடு மா கடல் வரம்பு அடைத்து
அதின் மேல் ஏறி ராவணன் அரண் குலைத்து எதிர் போராடு
நாரணன் மைந்தனான அநங்கன் மைத்துன வேளே
கலாபியின் விளங்கு செய்ப்பதி வேலாயுதா வியன் நலம்
கயப்பதி வாழ்வான தேவர்கள் பெருமாளே.
Add (additional) Audio/Video Link

நிறைந்த துப்பு இதழ் தேன் ஊறல் நேர் என மறம் தரித்த
கண் ஆலால(ம்) நேர் என
... நிறைந்த பவளம் போன்ற வாயிதழ்
தேனை ஒக்கும் என்றும், வீரம் கொண்ட கண் ஆலகால விஷத்தை
ஒக்கும் என்றும்,
நெடும் சுருட்டு குழல் ஜீமூத(ம்) நேர் என நெஞ்சின் மேலே
நெருங்கு பொன் தனம் மா மேரு நேர் என
... நீண்டதும் சுருள்
உடையதுமான கூந்தல் நீருண்ட மேகத்தை ஒக்கும் என்றும், மார்பின்
மேல் நெருங்கியுள்ள அழகிய தனங்கள் பெரிய மேரு மலைக்கு
ஒப்பானது என்றும்,
மருங்கு நிட்கள ஆகாசம் நேர் என நிதம்பம் முக்கணர்
பூண் ஆரம் நேர் என நைந்து சீவன் குறைந்து இதம்பட
வாய் பாடி
... இடுப்பு உருவம் இல்லாத வெளிக்கு ஒப்பானது என்றும்,
அவர்களது பெண்குறி மூன்று கண்களை உடைய சிவபெருமான்
அணிந்துள்ள மாலையாகிய பாம்புக்கு ஒப்பானது என்றும் கூறி உள்ளம்
சோர்வடைந்து, சீவன் மங்கலுற்று, இன்பம் அழிய வாயால் பாடி,
ஆதரம் அழிந்து அழைத்து அணை மேல் வீழு(ம்) மால்
கொடு குமண்டை இட்டு உடை சோரா விடாயில் அமைந்து
நாபி குடைந்து
... அன்பு இல்லாமல் அழைத்து படுக்கையின் மேல்
விழும் ஆசையுடன் களித்துக் கூத்தாடி, ஆடை நெகிழவும், காம தாகத்தில்
பொருந்தி, அந்த மாதர்களின் தொப்புளில் மூழ்கித் தொளைத்து
அனுபவித்து,
இளைப்புறும் மா மாயா வாழ்வு அருள் மடந்தையர்க்கு ஒரு
கோமாளம் ஆகிய குரங்கை ஒத்து உழல்வேனோ மனோலயம்
என்று சேர்வேன்
... களைப்பைத் தருகின்ற பெரிய மாயை
வாழ்க்கையைத் தருகின்ற விலைமாதர்கள் பால் ஒரு பைத்தியக்காரக்
குரங்கைப் போன்று திரிவேனோ? மன ஒடுக்கம் என்று அடைவேன்?
மறந்த சுக்ரிப மா நீசன் வாசலில் இருந்து உலுத்த நீ ஓராதது
ஏது சொல் மனம் களித்திடல் ஆமோ துரோகித(ம்)
... (தான்
சொன்ன சொல்லை) மறந்த சுக்ரீவன் என்னும் பெரிய இழிந்த
குரங்கரசன் வாசலில் நின்று, "உலுத்தனே நீ தெளிவு அடையாததற்கும்
உணர்ச்சி பெறாததற்கும் என்ன காரணம்? மனம் களிப்புறுதல் நியாயமா?
உன் செய்கை துரோகமாகும்.
முன்பு வாலி வதம் செய் விக்ரம சீராமன் நான் நிலம் அறிந்த
அதிச் சரம் ஓகோ கெடாது இனி வரும்படிக்கு உரையாய் பார்
பல ஆகவம் என்று பேசி
... முன்பு வாலியை வதம் செய்த வீரம்
உள்ள ஸ்ரீராமன் நான் என்பதை உலகம் எல்லாம் அறியும். இந்த
அம்பை கெட்டுப் போக விடவேண்டாம். இனியேனும் தாமதிக்காது
வரும்படிப் போய்ச் சொல்லிப் பல பேர்களின் விளைவைப் பார்ப்பாயாக"
என்று (இலக்குமணர் மூலமாகச் சுக்ரீவனுக்குச்) சொல்லி அனுப்ப,
அறம் தழைத்த அநுமானோடு மா கடல் வரம்பு அடைத்து
அதின் மேல் ஏறி ராவணன் அரண் குலைத்து எதிர் போராடு
நாரணன் மைந்தனான அநங்கன் மைத்துன வேளே
... தரும
நெறி விளங்கும் அனுமானுடன் பெரிய கடலில் அணையைக் கட்டி
அந்த அணையின் மீது போய் ராவணனுடைய கோட்டைகளை
அழித்து எதிர்த்துப் போராடிய (ராமனாகிய) திருமாலின் மைந்தன்
மன்மதனுக்கு மைத்துனனான தலைவனே,
கலாபியின் விளங்கு செய்ப்பதி வேலாயுதா வியன் நலம்
கயப்பதி வாழ்வான தேவர்கள் பெருமாளே.
... மயில் மீது
விளங்கும், வயலூர் வேலாயுதப் பெருமாளே, சிறப்பும் நலமும் கொண்ட
திருஆனைக்கா என்னும் பதியில் வாழ்வு கொண்டவனே, தேவர்கள்
தம்பிரானே.

Similar songs:

364 - நிறைந்த துப்பிதழ் (திருவானைக்கா)

தனந்த தத்தன தானான தானன
     தனந்த தத்தன தானான தானன
          தனந்த தத்தன தானான தானன ...... தந்ததான

Songs from this thalam திருவானைக்கா

353 - அஞ்சன வேல்விழி இட்டு

354 - அம்புலி நீரை

355 - அனித்தமான ஊன்

356 - ஆரமணி வாரை

357 - ஆலம் வைத்த

358 - உரைக் காரிகை

359 - ஓல மறைகள்

360 - கரு முகில்

361 - காவிப் பூவை

362 - குருதி புலால் என்பு

363 - நாடித் தேடி

364 - நிறைந்த துப்பிதழ்

365 - பரிமளம் மிக உள

366 - வேலைப்போல் விழி

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song